Wednesday, 29 April 2015

தூய்மை இந்தியா: துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!

தர பிரதமர்களைவிடத் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ளும் கோமாளித்தனத்தோடு “தூய்மை இந்தியா” எனும் விளம்பர வித்தையை ஆரவாரத்துடன் நடத்துகிறார் மோடி. அழுக்கும் அசுத்தமும் தாழ்த்தப்பட்டோரின் சேரிப் பகுதியில்தான் இருக்கிறது என்று வக்கிரமாகக் காட்டும் வகையில், காந்தி பிறந்தநாளன்று டெல்லியிலுள்ள தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள சேரிப்பகுதிக்கு வந்து தெருக்கூட்டுவதைப் போல புகைப்படம் எடுத்துக் கொண்டு, பாரத் சுவட்ச் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கிவைத்த அவர், இதனை 2019-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்கிறார். இதற்காக சச்சின் டெண்டுல்கர், அம்பானி, சல்மான்கான், கமல்ஹாசன் மற்றும் நடிகைகள், பிரமுகர்கள் என ஒன்பது பேரைத் தெரிவு செய்து தூய்மை இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மோடி தூய்மை இந்தியா
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே…
மல்டி லெவல் மார்க்கெட்டிங் போல இவர்கள் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுக்க, அப்படியே அது பல மடங்காகப் பெருகி நாடெங்கும் விரிவடையுமாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டதும், திடீரென அரசு அலுவலக வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஊடகங்களின் ஒளிவட்டத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, காங்கிரசின் சசிதரூர், பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் – என எல்லோரும் கையிலே துடப்பத்தை ஏந்திக் கொண்டு தெருக்கூட்டும் விளம்பர நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
சாமானிய மக்கள் தெருக்களில் கொட்டும் குப்பைகளைவிட, நாட்டின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கிவருவது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்  நிறுவனங்கள்தான். மறுசுழற்சி செய்ய இந்தியாவில் செலவு குறைவு என்பதால், ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து குப்பைகளும் நச்சுக் கழிவுகளும் பெருமளவில் இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. டெல்லியில் மட்டும் ஏறத்தாழ 30,000 டன் அளவுக்கும், நாடு முழுவதும் 13 லட்சம் டன் அளவுக்கும்  உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் உருவான மின்னணுக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
காடுகளையும் ஆறுகளையும் மலைகளையும் அழித்தும், ஆற்றுநீரையும் நிலத்தடி நீரையும் வரைமுறையின்றி உறிஞ்சியும், நச்சுக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவின் 13 நகரங்கள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. விஷவாயுக் கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகளால் போபால் நகரமே வாழத் தகுதியற்றதாகி விட்டது. தொழிற்சாலைக் கழிவுகளால் நாசமாக்கப்பட்டுள்ள குஜராத்தின் வாபி நகரம் மட்டுமின்றி, கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் அளவுக்கு நச்சுக் கழிவுகள் குவிந்து ஆண்டுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் தூய்மைப்படுத்த முன்வராத கார்ப்பரேட் அடியாளான மோடி, தெருக் குப்பைகளை அகற்றுவதையே தூய்மை என்று பித்தலாட்டம் செய்கிறார்.
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகள்தான் என்று சாடிவரும் மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைக்கவும், காடுகளைத் தமது வாழ்வாதரமாகக் கொண்டுள்ள பழங்குடி மக்களது கிராமச் சபைகளின் கருத்து கேட்டு ஆலைகள் தொடங்கப்பட வேண்டுமென்ற விதியை ரத்து செய்யவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை முடமாக்கியும் பெயரளவில் நீடித்துவரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு சட்டங்களின் முதுகெலும்பை முறிக்கக் கிளம்பியிருக்கிறார். இந்த அயோக்கியத்தனங்களை மூடிமறைக்கவே தூய்மை இந்தியா போன்ற அற்பத்தனமான கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன.

No comments:

Post a Comment